
புது தில்லி, ஆக. 17: "ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஊழலை உடனே கட்டுப்படுத்த மத்திய அரசிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.சமூக சேவகர் அண்ணா ஹசாரே கைது தொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.உலக அரங்கில் முக்கிய இடத்தை நோக்கி இந்தியா வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க பல தீய சக்திகள் செயல்படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் சக்திகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது என்று மன்மோகன் கூறினார்.ஆனால், பிரதமரின் விளக்கம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்."உண்ணாவிரதத்துக்கு 22 நிபந்தனைகளை தில்லி போலீஸார் விதித்தது ஏன்? காங்கிரஸ் போராட்டம் நடத்தும்போது 5 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொள்ளமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்குமா' என்று அவர் கேள்வி எழுப்பினார்.அண்ணா ஹசாரே கைது விவகாரத்தில் அரசியல் ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல் துறையினரின் பின்னால் நின்று கொண்டு நடவடிக்கை எடுத்தது தவறானது என்று அவர் கூறினார்.மக்களவையில் விளக்கம்: இப் பிரச்னை குறித்து, மக்களவையில் விளக்கம் அளித்துப் பேசும்போது "நாடாளுமன்றம் மட்டுமே சட்டத்தை உருவாக்க முடியும். அதில் அண்ணா ஹசாரே தனது கருத்தை திணிக்க முயலுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும்' என்று மன்மோகன் சிங் கூறினார்.அவர் மேலும் கூறியது: வலிமையான லோக்பால் சட்டம் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை ஹசாரே கொண்டிருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்த அவர் தேர்ந்தெடுத்த முறை சரியானதல்ல.ஹசாரேவின் போராட்டத்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால்தான் தடுப்பு நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டார்.எந்த ஒரு பிரிவினருடனும் மோதலை அரசு விரும்பவில்லை. ஆனால், அரசின் அதிகாரத்தையும், நாடாளுமன்றத்துக்கு உள்ள தனிப்பட்ட உரிமையையும் ஒரு பிரிவினர் மீற முயலும் போது அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமையாகும் என்றார் பிரதமர்."அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும்' என்று பிரதமர் தெரிவித்தபோது, எதிர்க்கட்சியினர் "வெட்கம், வெட்கம்' என்று கோஷங்களை எழுப்பினார்கள் .பிரதமரின் விளக்கத்தையடுத்துப் பேசிய பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானி, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த நெருக்கடி நிலையை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டார்.அப்போது அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்வானி நீலிக்கண்ணீர் வடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் குற்றம் சாட்டினார்.அதையடுத்து, பன்சல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment